தமிழகம்

ஒவ்வொரு வங்கியிலும் ரூ.2.5 லட்சம் செலுத்தலாமா?

செய்திப்பிரிவு

ஐநூறும்.. ஆயிரமும்..- உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வது மற்றும், கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ‘தி இந்து ’ உங்கள் குரலில்’ பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி கே.சுந்தரேசன் தரும் பதில்கள் இங்கே.

கையில் உள்ள பணத்தை மொத்தமாக செலுத்த முடியுமா?

நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சம் தனியார் வங்கியில் கடன் பெற்று நண்பர் களுக்கு கடன் வழங்கி வருகிறேன். பெரும்பாலும் வங்கியில் அந்த பணத்தை செலுத்துவதில்லை. தற்போது அனைத்து பணத்தையும் டெபாசிட் செய்தால் ஏதேனும் பிரச்சினை வருமா?

- சரவணக்குமார், மதுரை

நிச்சயம் கேள்வி வரும்

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வட்டிக்குக் கடன் கொடுக்கும் லேவாதேவியில் ஈடுபடுவது போல் தெரிகிறது. லேவாதேவி செய்பவராக இருந்தால் பேங்கர்ஸ் லைசென்ஸ், இணை வங்கிகளுக்கான என்.பி.எஃப்.சி. லைசென்ஸ், மாநில அரசு வழங்கும் பான் புரோக்கர் லைசென்ஸ் இதில் ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நீங்கள் செய்வது சட்டத்துக்குப் புறம்பானதே. நீங்கள் இப்போது பெரிய தொகையை டெபாசிட் செய்தால் நிச்சயம் கேள்வி வரும்.

ஒவ்வொரு வங்கியிலும் 2.5 லட்சம் செலுத்தலாமா?

சிலருக்கு இரண்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளன. ஒவ்வொரு வங்கியிலும் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியுமா?

- மணிகண்டன், தருமபுரி

எத்தனை கணக்கு என்பது முக்கியமல்ல

செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான அறிவிப்புதான் வெளியாகியுள்ளதே தவிர வருமான வரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. எனவே நீங்கள் எத்தனை கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எவ்வளவு தொகை டெபாசிட் செய்கிறீர்கள் என்பதுதான் கணக்கு. எத்தனை கணக்கிலும் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், அந்தத் தொகை வருமான வரி விலக்கு எல்லையைக் கடந்தால் வருமான வரித் துறைக்குக் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.

மகளின் கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை

ன் மகள் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசுக் கல்லூரியில் படிக்கிறார். அவருக்கான கல்விக் கட்டணத்தை கல்லூரி வளாகத்தில் உள்ள வங்கிக்கு அவரது கணக்குக்கு பணத்தை அனுப்புவேன். அந்தப் பணத்தை எடுத்து டிராப்ஃட் எடுத்து கல்லூரியில் கட்டுவார். தற்போது மகள் கணக்கில் பணம் போடுவதற்கு அவரது அனுமதிக் கடிதம் வேண்டும் என்கிறார்கள் வங்கி அலுவலர்கள். என்ன செய்வது?

-அருள், வேலூர்

மகளிடம் அனுமதி கடிதம் பெற்று செலுத்தலாம்

அரசால் ‘செல்லாது’ என அறிவிக்கப்பட்ட பணத்தை அவரவர் சேமிப்புக் கணக்கிலோ, நடப்புக் கணக்கிலோ மட்டுமே செலுத்த முடியும். இதைத் தவிர்த்து வங்கி சம்பந்தப்பட்ட வேறெந்த இனங்களுக்கும் அந்தப் பணத்தைச் செலுத்த முடியாது. எனவே, செல்லாத பணத்தை திருவனந்தபுரத்தில் தனது மகள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கு அவரது எழுத்து மூலமான அனுமதி இன்றி வேலூரில் செலுத்துவது தவறு. இதை வங்கி அனுமதிக்காது. உங்களது கணக்கில் பணத்தை செலுத்தி அதிலிருந்து ’நெட்பேங்கிங்’ மூலமாக உங்கள் மகளின் கணக்குக்குப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

வாடிக்கையாளர் பணத்தை எனது கணக்கில் செலுத்தலாமா?

ணம் மாற்றும் தொழில் செய்து வருகிறேன். இதுவரை எங்கள் கம்பெனி கணக்கில் இருந்து எஸ்பிஐ வங்கியில் பணம் செலுத்தி வந்தேன். 500, 1,000 ரூபாய் பிரச்சினை வந்த பின் 2 நாட்களுக்கு மட்டும் பணம் செலுத்துமாறு கடிதம் வழங்கினர். பின்னர் 500, 1,000 கட்டக்கூடாது. ‘ஆன்லைன்’ பரிமாற்றம் அல்லது காசோலை, வரைவோலை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். ஆனாலும், வாடிக்கையாளர்கள் முக்கியம் என்பதால் அவர்களிடம் 500, 1000 ரூபாய்களை வாங்கி என் கணக்கில் செலுத்தி கம்பெனிக்கு மாற்றுகிறேன். இதனால் ஏதேனும் சிக்கல்கள் வருமா?

- ஈரோடு மாவட்ட வாசகர் ஒருவர்

’ஹெல்ப் லைனில்’ கூடுதல் விளக்கம் பெறலாம்.

இவர் அனுமதி பெற்ற செலாவணி மாற்றுபவராக இருக்கும்பட்சத்தில் இவருக்கு வழங்கப்பட்டுள்ள லைசென்ஸிலேயே இந்த சந்தேகத்துக்கான வழிமுறைகளை நிச்சயம் சொல்லி இருப்பார்கள். அதில் கூடுதலாக இப்போது சில திருத்தங்களைச் செய்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகி சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளலாம். இதுபோன்ற சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதற்காகவே ரிசர்வ் வங்கியின் 24 மணி நேர ‘ஹெல்ப் லைன்’ (022-22602201, 022-22602944) சேவை இருக்கிறது.

செல்லாத நோட்டுகளை வாங்கலாமா?

நாங்கள் நடப்பு கணக்கு வைத்துள்ளோம். வியாபாரம் செய்து வருகிறேன். எங்களிடம் கடன் வாங்கிய நபர்கள் தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகளாக தருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ளலாமா? நடப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் எத்தனை நாட்களுக்கு பணம் செலுத்தலாம்? பிற்காலத்தில் ஏதேனும் பிரச்சினை வருமா? சேமிப்புக் கணக்கில்தான் ரூ.2.5 லட்சம் இருப்பு வைக்கலாம் என்கிறார்கள். கடன் கணக்கில் எவ்வளவு செலுத்தலாம் என்பது குறித்து கூறப்படவில்லை. சிறு வணிகர்கள் 500, 1000 ரூபாய்கள் இருப்பு வைத்துக்கொள்ளலாமா?

-அப்துல் அஜீம், நாகர்கோவில்,
அன்வர்பாஷா, திருவண்ணாமலை

அரசு அனுமதியின்றி வாங்கக் கூடாது.

அரசால் அறிவிக்கப்பட்டுள்ள, பால் பூத், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை தொழில் இருப்பவராக இருந்தால் நீங்கள் 500, 1,000 ரூபாய்களை அரசு அனுமதிக்கும் தேதி வரை வாங்கலாம். அதன் பிறகு வாங்கக் கூடாது. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் வியாபார தன்மையையும் அதன் அளவையும் பொறுத்து தங்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். இதற்கு எந்தக் கேள்வியும் இருக்காது. உங்களது வியாபாரத்துக்கு சம்பந்தமில்லாத தொகையை செலுத்தினால் சந்தேகம் வரத்தானே செய்யும். அத்தியாவசியத் தேவைகளுக்காக, செல்லாத நோட்டுகளை வைத்திருக்கும் சிறு வணிகர்கள் அவற்றை காலத்தே மாற்றிக்கொள்வதே நல்லது.

உறவுகள் திருப்பித் தரும் பணத்தை வங்கியில் செலுத்தலாமா?

மாதம் அறுபதாயிரம் சம்பளம் பெறும் நான் மாதம் ரூ.5 ஆயிரம் வரி செலுத்துகிறேன். எந்த சேமிப்பும் கிடையாது. கடன்தான் உள்ளது. பெற்றோர் பாதுகாப்பில் வாழ்கிறேன். எனக்கு மகன் உள்ளார். என் பணத்தை சகோதரர்கள் வியாபாரத்துக்குப் பயன்படுத்தினர். தற்போது அந்தப் பணத்தை திரும்பத் தருவதாகக் கூறுகின்றனர். நான் என் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு வைக்கலாம். 20 வயதுடைய எனது மகன் கணக்கில் எவ்வளவு சேமிக்கலாம்.

பெயர் சொல்ல விரும்பாத வங்கி ஊழியர்

ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் உறவுமுறைகளிடம் மட்டுமே கொடுக்கல் - வாங்கல் வைக்கலாம்.

கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதை எத்தனை பேருக்குக் கொடுத்தார் என்ற விவரம் இல்லை. உறவுகளில் யார் யாருக்கு பணம் கொடுத்து வாங்கலாம் என்பதற்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அதில் சொல்லப்பட்டுள்ள உறவுமுறைகளைத் தாண்டி மற்றவர்களுக்கு பணம் கொடுத்தால் அது லேவாதேவி முறையாகவே கொள்ளப்படும். ஏற்கெனவே நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள், எவ்வளவு வரி கட்டுகிறீர்கள் என்ற விவரம் வருமான வரித் துறைக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது, திடீரென நீங்கள் ஒரு பெரிய தொகையைக் கொண்டுபோய் வங்கியில் செலுத்தினால் கேள்வி கேட்காமல் இருக்கமாட்டார்கள்.

வெளிநாட்டில் இருந்தபோது சேமித்த பணத்துக்கு கேள்வி வருமா?

வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக இங்கே தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஆண்டு வருமானம் ரூ.5.5 லட்சம். வரி கட்டுகிறேன். வெளிநாட்டில் பணி செய்தபோது சேமித்த பணம் ரூ.2 லட்சத்தை இப்போது வங்கியில் செலுத்தினால் பிரச்சினை வருமா?

- பாலாஜி, புதுச்சேரி

செல்லாத நோட்டுகளாக இருந்தால் சிக்கலே.

நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் 100, 50 அல்லது அதற்குக் கீழ் முகமதிப்புகொண்ட நோட்டுகளாக இருந்தால் பெரிதாக கேள்வி வராது. அதுவே 500, 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்தால் சிரமம் தான்.

சிட்ஃபண்ட் கடன் தொகைக்கு வரி விதிப்பாளர்களா?

டந்த வாரம் சிட்ஃபண்டில் ரூ.2,88,993/- கடன்பெற்று வங்கியில் காசோலையாக போட்டேன். அதில் 3,213 மட்டும் எடுத்துள்ளேன். மீதி பணம் வங்கியில் உள்ளது. இந்தப் பணத்துக்கு வரி பிடிப்பார்களா? கடன் வாங்கும் பணத்துக்கும் வரி உண்டா?

- தண்டியாபிள்ளை, காட்டுமன்னார்கோயில்

பதிவாளர் அனுமதி பெற்ற சிட்ஃபண்டா என்று பாருங்கள்.

நீங்கள், மாநில சிட்ஃபண்ட் பதிவாளரின் அனுமதி பெற்று நடத்தும் சிட்ஃபண்டில்தான் கடன் பெற்றீர்களா என்பது தெரியவில்லை. அப்படி பெற்றிருந்தால் அவர்களுக்கென ஒரு ஆடிட்டர் இருப்பார். அவரை அணுகி உங்கள் சந்தேகத்தைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். அவருக்குத்தான் நீங்கள் என்ன மாதிரியான கடன் பெற்றிருக்கிறீர்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியும். அதேநேரம், அனுமதி பெறாத சிட்ஃபண்டாக இருந்தால் வழக்கமான நடைமுறைகள் உங்களுக்கும் பொருந்தும்.

2,000 ரூபாயை எளிதில் பதுக்க மாட்டார்களா?

றுப்புப் பணத்தை கண்டுபிடிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருப்பதாகக் கூறுகின்றனர். முதலில் 4 பெட்டிகளில் பணத்தை பதுக்கியவர்கள் இப்போது ரூ.2,000 நோட்டை 2 பெட்டிகளிலேயே பதுக்கி வைக்கமாட்டார்களா?

- நெல்லைதாசன், மேலப்பாளையம்

இப்படித்தான் பிரச்சினையை சமாளிக்க முடியும்.

மிகப் பெரிய அளவில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவிக்கும்போது அதற்கு மாற்றாக அரசாங்கம் புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடவேண்டும். ஒரே சமயத்தில் அவ்வளவு எண்ணிக்கையிலான நோட்டுகளை அச்சடித்துத் தருவது இயலாத காரியம் என்பதால் அதிக மதிப்பில் அதேசமயம் குறைவான எண்ணிக்கை யிலேயே பிரச்சினையை ஓரளவு சமாளிக்கும் வகையில் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்பட்டது. இதன்மூலம் தற்போது 40 சதவீதம் அளவுக்கு ரூபாய் தட்டுப்பாட்டை சமாளித்திருப்பதாக அரசு சொல்கிறது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடாமல் இருந்திருந்தால் நாடு எவ்வளவு களேபரம் ஆகி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

நீங்கள் செய்யவேண்டியது... 044-42890012 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர்முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களைப் பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

SCROLL FOR NEXT