தமிழகம்

கூவம் ஆற்றை தூர்வாரி சீரமைக்கும் பெருந்திட்டம்: முதல்கட்ட பணியை தொடங்கியது நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை

கி.கணேஷ்

கூவம் ஆற்றை தூர்வாரி, கழிவு நீர் கலப்பதை தடுத்து சீரமைக்கும் பெருந்திட்டத்துக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரம் ஏரிகள், குளங்கள், ஆறு மற்றும் நீர்வழித் தடங்கள் நிறைந்த பகுதியாகும். நகர மயமாதலின் காரணமாக, கழிவுநீர் பூமிக்குள்ளும், நீர்வழித் தடங்களிலும் விடப்பட்டு, நீராதாரங் கள் மற்றும் நீர்வழித்தடங்கள் மாசடைந்து வருகின்றன. நீராதாரங்களை மீட்கவும், பசுமை சூழலை உருவாக்கவும் 214 கிமீ நீர்வழிப்பாதை, 42 நீராதாரங்களை தூர்வாரி, அவற்றில் இணையும் கழிவுநீர் பாதைகளை வேறு பாதையில் திருப்பி, திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல் படுத்தி, ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக் கப்பட்டுள்ளது.

இதன் கீழ் முதலில் 58 ஏக்கர் பரப்பிலான அடையாறு சிற்றோடை பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 300 ஏக்கர் பரப்பிலான அடையாறு உப்புநீர் பகுதி சூழல் மேம்பாடு திட்டம் முடியும் தறுவாயில் உள்ளது. இதைத் தொடர்ந்து, அடையாறு ஆற்றின் 42.5 கிமீ தூரத்துக்கான சீரமைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் நிர்வாக ஒப்புதலுக்கு காத் திருக்கிறது. தற்போது 32 கிமீ நீளமுள்ள கூவம் ஆற்றின் சூழல் சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கூவம் ஆற்றில் விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், டிரஸ்ட்புரம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் வந்து இணை கின்றன. இவற்றில் பெரும்பாலும் கழிவுநீர் வந்து சேருவதால் கூவம் மாசடைகிறது. இதை தடுத்தால் மட்டுமே, கூவத்தை சீரமைக்க முடியும் என்பதில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுதியாக உள்ளது.

இதையடுத்து, கூவத்தை முழு மையாக சீரமைக்கும் வகையில், கழிவுநீர் வெளியேற்றத்தை இடை மறித்து, அதன் பாதையை திருப்பு தல், திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் நிறு வனத்தை தேர்வு செய்யும்படி, திட்டத்துக்கான தொழில் நுட்ப உதவிகளை வழங்கும் தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தை (TNUIFSL) சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை நாடியுள்ளது. இதையடுத்து, தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தகுதி யான நிறுவனத்தை தேர்வு செய் வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கூவம் ஆற்றில் அதன் தொடக்கத்தில் இருந்து பள்ளிப்பட்டு ஓடை, அயனம் பாக்கம் உபரிநீர், ஆலப்பாக்கம் உபரிநீர், நொளம்பூர் கால்வாய், அம்பத்தூர் சிட்கோ கால்வாய், பாடிக்குப்பம் கால்வாய், விருகம் பாக்கம் ஓடையின் உபரிநீர், விருகம்பாக்கம்- அரும்பாக்கம் கால்வாய், டிரஸ்ட்புரம் கால்வாய், நுங்கம்பாக்கம் கால்வாய் ஆகியவை இணைகின்றன. இவற் றின் மூலம் கூவத்தில் இணையும் நீர், அதன் தன்மை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், கழிவுநீர் பாதைகளை வேறு வழியில் திருப்புவதற்கான திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும். மேலும், கூவத்துடன் தொடர்புடைய அனைத்து நீராதாரங்களின் தன்மை, அவற்றின் அளவு உள்ளிட்ட தகவல்களையும் சேக ரிக்க வேண்டியுள்ளது. இதற் காகத்தான் தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக, கூவத்தை முழுமை யாக சீரமைத்து மீட்டெடுக்க பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த 2014-15-ம் ஆண்டு பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பு ரூ.ஆயிரத்து 934 கோடியே 84 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவ தற்கு முதல்கட்டமாக ரூ.604 கோடியே 77 லட்சம் ரூபாய்க்கான நிர்வாக அனுமதியை கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கி யது. கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இத்திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT