பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை சில மருத்துவமனை, மருந்தகங்களில் வாங்க மறுப்பு தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தடை விதித்தார்.
கடந்த செவ்வாய் இரவு முதல் இந்த அதிரடி தொடங்கியது. பெட்ரோல் பங்க், மருந்தகம், மருத்துவமனைகளில் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
ஆனால், பல மருத்துவமனைகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பெற்றுக் கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மருத்துவமனைகளில் இது பற்றி வரவேற்பரையில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் மருத்துவர்கள் குறிப்பிட்ட மருந்துகள் முழுமையும் வாங்க முடியாமல் அதிக அளவு பணம் இருந்தும் கையில் இருக்கும் புதிய ரூபாய்க்கு தக்கவாறு வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.