வங்கக் கடலில் நிலை கொண் டிருக்கும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த இரு தினங்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், மத்திய வங்கக் கடலில் கடந்த 12-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த இரு நாட்களில், இலங்கை கடற் கரையை நோக்கி நகரக்கூடும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண் யம், மயிலாடுதுறை, ஆனைக்கரன் சத்திரம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், ராமேஸ்வரம், நன்னிலம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ., பாம்பன், நீடாமங்கலம், அதிராம்பட்டினம், குடவாசல், சீர்காழி, பாபநாசம், தொண்டி, கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.