சென்னை: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வை, பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய், புதன் எனவாரத்தில் 2 நாட்களிலும், மற்றவர்களுக்கு பிற நாட்களிலும் நடத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கடந்த 13-ம் தேதி முதல்ஒரு வாரத்துக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.20) ஓட்டுநர் உரிமத் தேர்வில் பங்கேற்க அவர்கள் முன்பதிவு செய்ய முயற்சித்தனர்.
ஆனால், பலரால் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூறினர். இது தொடர்பான செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது. இந்நிலையில், இந்த நடைமுறைக்கான காரணம்குறித்து போக்குவரத்து துறைஆணையர் இல.நிர்மல் ராஜ்கூறியதாவது: தமிழக போக்குவரத்து துறையின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் நேரடியாக சேவை பெறும் வகையிலும் போக்குவரத்து துறை அமைச்சர், உள்துறை செயலரின் ஆலோசனைப்படி, ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, வார வேலை நாட்களில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 2 நாட்களிலும், பொதுமக்கள் மற்ற 3 நாட்களிலும் ஓட்டுநர் உரிமத் தேர்வில்பங்கேற்கும் வகையில் முன்பதிவுசெய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதில் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
அதே நேரம், இந்த நடைமுறை காரணமாக தங்களுக்கு பாதிப்புஏற்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மீண்டும் ஆலோசனை நடத்தி, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.