தமிழகம்

தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜா மீது கடும் நடவடிக்கை: ஓபிஎஸ், தினகரன், மநீம வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் நிறுவன அதிகாரிகளை மிரட்டிய தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓ.பன்னீர்செல்வம்: செங்கல்பட்டு மறைமலைநகரை அடுத்த மெல்ரோசபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து, பல ஆண்டுகளாக கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த இடத்தை காலி செய்வது தொடர்பான விவகாரத்தில், அங்கு சென்ற தாம்பரம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தனியார் நிறுவன அதிகாரிகளை ஆபாசமாக திட்டியதுடன், கை, கால்களை உடைத்து விடுவதாக மிரட்டிஉள்ளார்.

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஒரு சட்டப்பேரவை உறுப்பினர், அதைச் சீரழிக்கும் வகையில் செயல்படுவது கண்டனத்துக்குரியது. தாம்பரம் எம்எல்ஏ மீது தற்போது பதிவு செய்யப்பட்ட வழக்கை நீர்த்துப்போகச் செய்யாமல் பார்த்துக் கொள்வதுடன், அத்துமீறலில் அரசியல்வாதிகள் ஈடுபடாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, காவல் துறை, நீதிமன்றத்தால் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளில், ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாமல் பர்த்துக்கொள்ள வேண்டும்.

டிடிவி.தினகரன்: மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட திமுகவினரின் நடவடிக்கைகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் ஆரம்பித்து, எம்எல்ஏ வரை வந்து நிற்கிறது. தாம்பரம் திமுக எம்எல்ஏ மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதேன்?

ஆர்.தங்கவேலு: தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடம் அதிருப்தியை எற்படுத்தியுள்ளன. பொறுப்புமிக்க சட்டப்பேரவை உறுப்பினர் நிலக் குத்தகை விவகாரத்தில் பஞ்சாயத்து பேசுவதும், மிரட்டுவதும் ஏற்கத்தக்கதல்ல. இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருந்தாலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகஅரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT