உடலில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து விமானத்தில் கடத்தி வந்த பயணியை கோவை விமான நிலையத்தில் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
நேற்று காலை 3.30 மணியளவில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம், கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அப்போது நடைபெற்ற சோதனையில் கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த யூசுப்(28) என்பவர் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் (30 பாக்கெட்டுகள்) உரிய அனுமதியின்றி கொண்டு வந்ததாக பிடிபட்டார். அவரிடம் வருவாய் புலனாய்வுப் பிரிவு இயக்குநரக அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
அப்போது, அதே விமானத்தில் வந்த கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த முர்ஷித்(32) என்ற பயணியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர் தனது உடலில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
ரூ.20 லட்சம் மதிப்பு தங்கம்
இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற அதிகாரிகள், உடலில் இருந்த 6 தங்கக் கட்டிகளை (மொத்த எடை 700 கிராம்) பறிமுதல் செய்தனர். இவை மொத்தம் 20 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளன.
இதையடுத்து அவரைக் கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.