தாமிரபரணி தனது பாதையில் கடக்கும் பெரிய நகரம் திருநெல்வேலி. இங்குதான் அனைத்து நகரங்களையும்விட அதிகமான கழிவுகளை தாமிரபரணி சுமக்கிறது. கழிவுகளும், குப்பைகளும் தாமிரபரணி கரையில் கொட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, கருப்பந்துறை, கொக்கிரகுளம், குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை நீர் ஆறுபோல் தாமிரபரணியில் கலப்பது இயற்கை ஆர்வலர்களை கண்ணீர்விட வைத்திருக்கிறது.
ஆட்சியர் கவனத்துக்கு...
திருநெல்வேலியில் கருப்பந்துறை முதல் வெள்ளக்கோயில் வரை 27 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலக்கிறது. ஆட்சியர் அலுவலகம் அருகே மட்டுமின்றி ஆற்றங்கரை பகுதி முழுக்கவே திறந்தவெளி கழிப்பிடமாகவும், பன்றிகள் வளர்க்கும் இடமாகவும் மாற்றப் பட்டிருக்கிறது. ஆற்றங்கரையை தூய்மையாக வைத்திருக்கவும், ஆற்று நீரை புனிதமாக கருதி செயல்படவும் மக்கள் பலரும் விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பிலுள்ள அனைத்து கடைகள், தங்கும் விடுதிகளின் கழிவுகள் சிந்துபூந்துறையில் ஆற்றுக்குள் விடப்படுகின்றன. திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் மட்டும் 1 நிமிடத்துக்கு 11 லட்சம் லிட்டர் கழிவுநீர் தாமிரபரணியில் கலப்பதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 686 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகின்றன. ஆனால், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமையால் அவையெல்லாம் தோல்வியில் முடிந்துவிடுகிறது.
திறந்தவெளி ‘பார்’ - கடந்த சில வாரங்களுக்குமுன் திருநெல்வேலியில் அருகன்குளம் பகுதி தாமிரபரணியில் ஜடாயு தீர்த்த கட்டம் பகுதியையொட்டி ஆற்றங்கரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற தூய்மை பணி முகாம் நடத்தப்பட்டிருந்தது. ஆற்றங்கரையோரத்தில் குப்பைகளை மாணவ, மாணவியர் அகற்றினர். அப்போது 1 மணிநேரத்தில் 50 கிலோ காலி மதுபாட்டில்களை மாணவர்கள் சேகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோல் தாமிரபரணி கரையோர பகுதிகளிலும், படித்துறைகள் அமைந்துள்ள இடங்களிலும், தாமிரபரணி ஆற்றிலும் மதுபாட்டில்கள் நிறைந்து காணப்படுகின்றன. பொறுப்புணர்வு இல்லாமல் மதுபாட்டில் களை வீசுவதும், பாட்டில்களை உடைத்துப் போடுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் பொருட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள் (DEWATS Technology Structure) பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டன. அரைகுறையாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. தற்போது இந்த வடிகட்டி கட்டமைப்புகள் உடைப்பெடுத்து கழிவுநீர் தாமிரபரணியில் கலக்கும் காட்சிகளை கண்கூடாக காணமுடிகிறது.
பொறுப்பற்ற நிலை: இதுகுறித்து நெல்லை நீர்வளம் அமைப்பைச் சேர்ந்த சாமி நல்லபெருமாள் கூறும்போது, “மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆற்றில் சாக்கடை கலக்கும் விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றிருக்கிறது. ஆனால், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை” என்று தெரிவித்தார்.
தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது, ஆற்றங்கரையை அசுத்துப்படுத்துவது போன்றவற்றை தடுக்கும் விஷயத்தில் அரசுத்துறை நிர்வாகங்கள் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்து வதுடன், பொதுமக்களும் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கருத்து.