தமிழகம்

போலி, காலாவதி மருந்துகளைத் தடுக்க 14 சிறப்பு குழுக்கள்: தமிழக அரசு நடவடிக்கை

சி.கண்ணன்

தமிழகத்தில் போலி மற்றும் காலா வதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு காலாவதியான மற்றும் போலியான மருந்துகளை விற்பனை செய்த கும்பலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து மருந்து கட்டுப்பாடு துறை அதிகாரிகள், தமிழகம் முழு வதும் நடத்திய சோதனையில் ஏராளமானோர் சிக்கினர். இதனால் போலி, கலப்பட மருந்துகளின் விற்பனை குறைந்தது. இந்நிலை யில் சமீப காலமாக அவற்றை விற்பனை செய்யும் கும்பல் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கி யுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: தமிழகத்தில் முன்பு போல மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை. அதனால் போலி மற்றும் காலாவதி மாத்திரை மருந்துகள் மீண்டும் புழக்கத்துக்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் டாக்டர் சீட்டு இல்லாமல் கடைகளில் மருந்து வாங்க முடியாது. இந்தியாவில் டாக்டர்களின் சீட்டு இல்லாமல் காய்ச்சல், தலைவலி போன்ற வியாதிகளுக்கு பொதுமக்கள் மருந்துகளை வாங்குகின்றனர். இதுவே போலி மாத்திரை மருந்துகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம்.

உடல் நலம் பாதிப்பு

மருந்துகடைகளில் விற்கப் படும் மருந்துகளின் எடை மற்றும் தரம் சரியாக உள்ளதா என்றெல் லாம் யாரும் சோதனை செய்வ தில்லை. அதே போல மாத்திரை மருந்துகளில் அதன் காலாவதி தேதி கண்ணுக்கே தெரியாத அளவில் சிறிதாக அச்சிடப் பட்டுள்ளது. அதனால் அவை எளிதாக பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன. அவற்றை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். உடல் உறுப்புகளும் பாதிப்படையும். அதனால் பொது மக்கள் மருந்துகளை சோதனை செய்ய வசதியாக மாவட்டம் தோறும் மருந்து சோதனை ஆய்வு மையம் மற்றும் நடமாடும் மருந்து சோதனை ஆய்வு மையத்தை அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

140 மருந்து ஆய்வாளர்கள்

இதுதொடர்பாக மருந்து கட்டுப் பாடு இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மருந்து கடைகளிலும், கம்பெனிகளிலும் சோதனை செய்து போலி மற்றும் காலாவதி மாத்திரை மருந்துகளை பறிமுதல் செய்து வருகிறோம். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப் படுகிறது. மருந்து கட்டுப்பாடு துறையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மருந்து ஆய்வாளர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் தற்போது 140 மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர்.

போலி மற்றும் காலாவதியான மருந்துகளைக் கண்டுபிடிக்க வசதி யாக தமிழகத்தை 14 மண்டலங்களாக பிரித்துள்ளோம். ஒவ்வொரு மண்டலத்திலும் மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு போலி மற்றும் காலாவதி மாத்திரை மருந்துகளை பிடிக் கின்றனர். தமிழகத்தில் 2 ஆண்டு களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது போலி மற்றும் காலாவதி மாத்திரை மருந்துகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

பொதுமக்கள் புகார் தரலாம்

மருந்து கடைகளில் போலி மற்றும் காலாவதியான மாத்திரை மருந்துகள் விற்பனை செய்யப் படுவதாக தெரியவந்தால் மருந்து கட்டுப்பாடு துறையை 044-24321830 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அப்துல்காதர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT