தருமபுரி எம்.பி. செந்தில்குமார் அரசு விழாவின்போது நடந்து கொண்ட விதம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது அதியமான்கோட்டை. இங்குள்ள, அதியமான்கோட்ட வளாகத்தில் நவீன நூலகம் அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்த இந்த விழாவில் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினர் வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சியின்போது, அப்பகுதியில் சில செங்கற்கள் வைக்கப்பட்டு அதன்மீது மஞ்சள், குங்குமம் தூவப்பட்டிருந்தது. மேலும், அப்பகுதியில் பூக்களும் தூவப்பட்டிருந்தன.
இதைக் கண்ட எம்.பி. செந்தில்குமார், மஞ்சள்-குங்குமம் தூவப்பட்ட செங்கற்களை நிகழ்ச்சிக்கு முன்னதாக, வேறு திசையை நோக்கி திருப்பி வைத்துள்ளார். பின்னர் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் அடுத்தடுத்து புறப்படத் தொடங்கினர். தன் காருக்கு அருகில் சென்ற மக்களவை உறுப்பினர் அப்பகுதியில் இருந்த திமுக ஒன்றிய நிர்வாகிகளிடம், ‘தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி.
இந்த ஆட்சியில், அரசு விழாக்களில் குறிப்பிட்ட மதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் நடப்பதை ஏற்க முடியாது. இதை நான் ஏற்கெனவே கண்டித்திருக்கிறேன். இருப்பினும், அரசு நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட மதத்தை மட்டும் முன்னிலைப்படுத்தும் வேலை களை செய்கிறீர்கள்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை எதற்கு அழைக்கிறீர்கள்’ என்று கடுமையாக கடிந்து கொண்டார். இவ்வாறு அவர் கடிந்து கொண்டபோது திமுக-வினரே இருவேறு கருத்துகளை முன் வைத்து விவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
இகுறித்து, எம்.பி. செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘மதச் சார்பின்மை எனது பிரதான கொள்கைகளில் ஒன்று. அதனாலேயே நான் திமுக-வில் இணைந்து பணியாற்றுகிறேன்.
இன்றைய (நேற்று) விழாவில் ஒரு மதத்தை குறிக்கும் குறியீடுகள் தெரியவேண்டாம் என்று மஞ்சள்-குங்குமம் பூசப்பட்ட செங்கற்களை திருப்பி வைத்தேன். மற்றபடி யாருடைய நம்பிக்கையையும் குறைகூறுவதோ, அலட்சியப் படுத்துவதோ என நோக்கமல்ல’ என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஆலாபுரம் கிராமத்தில் நீர்வளத்துறை சார்பில் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி தொடக்க நிகழ்ச்சியின்போது அர்ச்சகரை வைத்து பூஜை நடத்தி பணியை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதும், எம்.பி. செந்தில்குமார் நீர்வளத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை கடுமையாக கண்டித்து வாக்குவாதம் செய்திருந்தார்.
அப்போது அந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிகழ்வும், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.