கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சட்ட விதிகளைத் திருத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் இருந்தது.
ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் அடங்கிய புதிய பிரமாணப் பத்திரத்தை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சட்டத் திருத்தங்கள் மூலம் பொதுச் செயலர் மற்றும் இடைக்கால பொதுச் செயலர் பதவியை உருவாக்குவது,
இடைக்கால பொதுச் செயலர் பதவியில் பழனிசாமியை நியமிப்பது, பொதுச் செயலர் பதவிக்கான தேர்தலை 4 மாதங்களில் நடத்தி முடிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2,532 பிரமாணப் பத்திரங்கள்: இந்த விவரங்களை கடந்த ஜூலை 13-ம் தேதியே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தோம். அத்துடன் அந்த தீர்மானங்களை ஆதரிப்பது தொடர்பான, 2 ஆயிரத்து 532 பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்திருந்தோம்.
இதற்கிடையில், பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், நாங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த, இரு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின் நகல் மற்றும் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்கள், அதை ஆதரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரம் ஆகியவற்றை மீண்டும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, இந்த தீர்மானங்களை ஏற்று தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நேரில் வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
ஓபிஎஸ் தனது கடிதங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவது, சட்டத்துக்குப் புறம்பானது. நீதிமன்றங்களில் வழக்கு முடிந்த பிறகு, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவரது ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட்டு, இடைக்காலப் பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். ஓபிஎஸ் தனது கடிதங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவது, சட்டத்துக்குப் புறம்பானது.