ராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவரை அப்பள்ளியின் தலைமையாசிரியை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது எனக் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக அப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், எங்கள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகள், பள்ளி வளாகத்துக்குள் வந்ததும் அதை கழற்றி வைத்துவிட்டு சீருடையுடன் வகுப்பில் பங்கேற்பர்.
பின்னர் பள்ளி நேரம் முடிந்ததும் ஹிஜாப் அணிந்து கொண்டு வீட்டுக்குச் செல்வர். கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது என்று கூறினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் முருகம்மாள் நேற்று பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
அதனையடுத்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து கூறும்போது, பள்ளித் தலைமையாசிரியை ஹிஜாப் அணிந்து வரத் தடை உள்ளது எனக் கூறவில்லை. பள்ளியில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையைக் கூறியுள்ளார்.
இருந்தபோதும் மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஹிஜாப் அணிந்து வரலாம் எனக் கூறப்பட்டது. அரசும் ஹிஜாப் அணிந்து வர எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று கூறினார்.