குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் பிடிபட்ட கொழிசாளை மீன்கள் உணவிற்கு விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அவை கோழித்தீவனம், மீன்எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. 
தமிழகம்

மீன்கள் அதிகம் கிடைத்தும் விற்பனையின்றி தேக்கம்: பாதி விலைக்கு விற்பனை

செய்திப்பிரிவு

குமரியில் கொழிசாளை உட்பட மீன்கள் அதிகம்கிடைத்து வரும் நிலையில் விற்பனையாகாமல் துறைமுகங்களில் தேக்கம் அடைந்துள்ளன.

அவற்றை கோழித்தீவனம், மீன்எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதி விலைக்கு வாங்கி செல்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.

இவை தவிர 46 மீன்பிடி கிராமங்களில் இருந்தும் பைபர் மற்றும் நாட்டுப் படகுகளிலும் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிற பகுதிகளில் இருந்து டோக்கன் முறையில் அனுமதி பெற்று மீன்பிடி பணி நடந்து வருகிறது. ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகுகளில் மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. குறிப்பாக சாளை ரகங்கள், நெத்திலி போன்ற சிறியவகை மீன்பாடு அதிகமாக உள்ளது.

இது தவிர விள மீன், பாரை, வாழை, இறால், கணவாய் மீன்களும் பிடிபடுகின்றன. கடந்த 4 தினங்களாக கொழிசாளை ரகங்கள் டன் கணக்கில் கிடைக்கின்றன. வழக்கமாக உள்ளூர்த் தேவைக்கு போக கேரளாவுக்கு அதிக அளவில் இவை விற்பனையாகும். தற்போது விற்பனை ஆகாமல் மீன்பிடி துறைமுகங்களில் தேக்கம் அடைந்துள்ளது.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு கரைதிரும்பிய 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கொழிசாளை மீன்கள் டன் கணக்கில் பிடிபட்டிருந்தன. அவற்றை ஏலம் விட்டபோது உரிய விலை கிடைக்காததால் படகு உரிமையாளர்கள், மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தேக்கம் அடைந்து வீணாவதை விட கிடைத்த விலைக்கு விற்பனை செய்யும் முடிவுக்கு மீனவர்கள் வந்தனர். இதனால் கோழித் தீவனம், உரம், மீன் எண்ணெய் தயார் செய்யும் நிறுவனத்தினர் போட்டி போட்டு வாங்கினர்.

வழக்கமாக கிலோரூ.50 ரூபாய்க்கு மேல் விலை போகும் கொழிசாளை மீன், ரூ.20க்கு மட்டுமே விற்பனை ஆனது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இந்துக்களில் பெரும்பாலானோர் அசைவம் உண்பதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால் வழக்கமாக விற்பனையாகும் மீன்களில் பாதியளவு கூட விற்பனை ஆகவில்லை. இது மொத்த மீன் வியாபாரிகளில் இருந்து தலைச்சுமையாக பெட்டியில் கொண்டு மீன் வியாபாரம் செய்வோர் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டம், சின்னமுட்டம் துறைமுகப் பகுதிகளிலும் மீன்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது.

SCROLL FOR NEXT