பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால் அரசு பேருந்து களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் 25 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டார். மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற விமான நிலையங்கள், ரயில்வே, பஸ் நிலைய டிக்கெட் கவுன்டர்கள், அரசு கூட்டுறவு அங்காடிகளில் வரும் 24-ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஒரு சில துறைகளில் மட்டுமே இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது.
குறிப்பாக, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகளை தவிர, பெரும் பாலான பேருந்துகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் வாங்கு வதில்லை. இதனால், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரி களிடம் கேட்ட போது, ‘‘நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகளை தவிர, மற்ற பேருந்துகளில் நடத்துநர்கள் மூலம் ரூ.500, 1000 நோட்டுகள் பெற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், டிக்கெட் முன்பதிவு மையங்களில் பழைய நோட்டுகளை பெற்றுக் கொள்கிறோம். இதுதவிர, மாதந் தோறும் சீசன் பாஸ் வழங்கவும் பழைய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள் ளோம்.
பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் உத்தரவினால் அரசு பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக சென்னை, கும்பகோணம், விழுப் புரம் மற்றும் விரைவு போக்கு வரத்து கழகங்களில் தினமும் வரும் வருவாயில் தலா ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை யில், குறைந்துள்ளது. 25 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வண்டலூர், மகாபலிபுரம், மெரினா கடற்கரை, கோவளம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது’’ என்றனர்.
ரயில்களில் எப்படி?
தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘பழைய ரூ.500,1000 நோட்டுகளை டிக்கெட் முன்பதிவு மையங்களில் நாங்கள் பெற்று வருகிறோம். இருப்பினும் தற்போதுள்ள பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவே மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், கையில் இருக்கும் பணமும் குறைந்துள்ளதால், தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்த்து விட்டனர். இதனால், ரயில்களில் சுமார் 10 சதவீதம் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது’’ என்றார்.