தமிழகம்

தீபாவளிக்கு வெளியூர் செல்ல விரைவு பேருந்து முன்பதிவு தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி (திங்கள்) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்.20-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று (செப்.20)தொடங்கியது. தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பு, அதாவது அக்.21-ம்தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று (செப்.21) முதல் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தசராவுக்கு கூடுதல் பேருந்துகள்

தசரா பண்டிகையையொட்டி திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரும் அக்.1 முதல் 4 வரை சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை முடிந்து திரும்ப ஏதுவாக அக்.6 முதல் 10-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT