தமிழகம்

சென்னை மாநகரம் தெற்கு நோக்கி வளரும்போது புதிய விமான நிலையம் ஏன் வடக்கில் செல்ல வேண்டும்? - தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: சென்னை மாநகரம் தெற்கு நோக்கி வளரும்போது விமான நிலையத்தை ஏன் வடக்கு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது விமான நிலையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனை எதிர்த்து பொதுமக்கள் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் அழைப்பை ஏற்று போராட்டத்துக்குச் சென்ற விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது விமான நிலையம் அவசியமா, இதனை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து பல கேள்விகளுக்கு அவர் நமது "இந்து தமிழ்திசை" நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் விவரம்:

போராட்டம் நடந்து வரும் ஏகனாபுரம் நோக்கி நீங்கள் வந்தபோது போலீஸார் என்ன கூறி தடுத்தனர்?

விமான நிலையத்துக்கு எதிராக கடந்த 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் வைத்திருந்தனர். அவர்கள் அழைப்பின்பேரில் உண்மை நிலையை தெரிந்து கொள்ளவே வந்தேன். வெளியூரைச் சேர்ந்தவர்கள் வரக் கூடாது என்று பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் இவர்கள் தடுக்கின்றனர். தமிழகத்தின் எந்தப் பகுதி போராட்டத்துக்கும் ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்துதான் போராடியுள்ளது.

பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் என்ன வகையான பாதிப்பு என்று கருதுகிறீர்கள்?

இந்தப் பகுதியில் உள்ள 73 ஏரியின் உபரிநீர்தான் செம்பரம்பாக்கம் ஏரிக்கான பாசன நீராக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் 7 கி.மீ கால்வாயை அபகரிக்கின்றனர். இதனால் சென்னைக்கு குடிநீர் தடுப்பாடு ஏற்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அப்புறப்படுத்தப்படுவதுடன், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. தற்போதுதான் அந்த மக்கள் வாழ்வில் முன்னேறி வருவதாக தெரிவிக்கின்றனர். அவர்களும் பாதிக்கப்படுவர்.

விமான நிலையம் இந்தப் பகுதியில் வேண்டாம் என்றால் வேறு எங்கு கொண்டு வருவது?

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக அளவில் தரிசு நிலங்கள் உள்ளன. ஏற்கெனவே உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் இருந்ததாகக் கூறுகின்றனர். அந்தப் பகுதிகளை தேர்வு செய்யலாம்.

அரசு புறம்போக்கு இடங்கள் அங்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறதே?

அரசு புறம்போக்கு இடங்கள் 1,300 ஏக்கர் இருப்பதாக கூறுகின்றனர். அவை எல்லாம் நீர் நிலைகள். ஏழை மக்கள் நீர் நிலைகளில் இருந்தால் அவர்களை வெளியேற்றுகின்றனர். தங்கள் சொந்த இடத்தில் இருக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு நீர் நிலைகளை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க எந்தச் சட்டம் இடமளிக்கிறது.

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் வேறு என்ன பிரச்சினை உள்ளது?

அருகாமையில் அரக்கோணம் விமான படை தளம் உள்ளது. வரும் காலங்களில் விமான படைத் தளத்தை விரிவுபடுத்த இந்த விமான நிலையம் இடையூறாக இருக்கலாம்.

முதலமைச்சரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

முதலமைச்சர் விவசாயிகளுக்கான ஆட்சியை நடத்துவதாகக் கூறுகிறார். அதனை செயல்பாட்டில் காட்ட வேண்டும். மக்களிடம் கருத்து கேட்காமல் எந்த நிலத்தையும் கையகப்படுத்தக் கூடாது. இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

SCROLL FOR NEXT