நுகர்வோர்கள் மின்கட்டணத்தை தனியார் முகவர்களிடம் செலுத்த வேண்டாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை சில தனியார் முகவர்கள் மின்வாரிய அனுமதியின்றி வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. இது சட்டத்துக்குப் புறம்பானது. இதுபோல, மின்கட்டணத்தை வசூலிக்க எந்த முகவர்களையும் தமிழ்நாடு மின்சார வாரியம் நியமனம் செய்யவில்லை. எனவே மின்நுகர்வோர்கள் அவர்களிடம் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மின்கட்டணம் செலுத்த மின்வாரிய அலுவலகங்கள், இ-சேவை மையங்கள், அஞ்சல் அலுவலகங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மின்கட்டணத்தை செலுத்த சிட்டி யூனியன் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகிய 3 வங்கிகள் மற்றும் சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, இந்தியன் வங்கி ஆகிய 3 வங்கிகளின் ‘மொபைல் ஆப்ஸ்’ வாயிலாகவும், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஏடிஎம் மையங்களிலும் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. www.tangedco.gov.in என்ற இணைதளம் வாயிலாக டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்தலாம்.
இவைதவிர, தாழ்வழுத்த மின்கட்டணம் வசூலிக்க வேறு எந்த தனியார் முகவர்களுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே, மின்வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வலை தளம் மற்றும் பணம் செலுத்தும் இடங்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத முகவர் களிடம் மின் கட்டணத்தை செலுத்தினால், மின்துண்டிப்பு ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து, அதை தவிர்க்குமாறு மின்நுகர்வோர்கள் அறிவுறுத்தப் படுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.