சென்னை: பெண்கள் அழுவதற்குப் பிறந்தவர்கள் அல்ல, சாதிக்கப் பிறந்தவர்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் 'லேடிஸ் ஸ்பெஷல்' மாத இதழின் 25-வது வெள்ளி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று கிரிஜா ராகவன் எழுதிய 'ரவுத்திரம் பழகு' புத்தகத்தை வெளியிட சுதா ரகுநாதன் பெற்று கொண்டார்.
நிகழ்ச்சியில், தமிழிசைக்கு மகா சக்தி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் சிவசங்கரிக்கு வித்யா சக்தி, சங்கீதகலாநிதி சுதா ரகுநாதனுக்கு கான சக்தி, நடனக் கலைஞர் நர்த்தகி நட்ராஜுக்கு நாட்டிய சக்தி உட்பட 200-க்கும் மேற்பட்ட சாதனை பெண்களுக்கு சக்தி விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: கிரிஜா ராகவன் எழுதிய 'ரவுத்திரம் பழகு' புத்தகத்தில் என் அம்மா கருப்பி உன் அம்மா கருப்பி என எழுதப்பட்டுள்ளது. என்னைத் தமிழகமே கருப்பி என்றது.சமூக வலைத்தளங்களில் சுருட்டை, பரட்டை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நாங்கள் கருப்பு அல்ல; நெருப்பு.
பெண்கள் பல தடைகளைத் தாண்டி முன்னுக்கு வர வேண்டியுள்ளது. உழைப்பைத் தவிர வேறு எதுவும் நமக்கு வெற்றி தராது. பெண்கள் முன்னுக்கு வரத் துணிச்சல் தேவை. ஒரு பெண் எல்லாவற்றிலும் சவால்களை சந்தித்துதான் ஆக வேண்டும். இன்றைக்கு நான் ஆளுநராக இருக்கிறேன் என்றால் என்னுடைய பாதை மலர் பாதையாகஇருக்கவில்லை; மிகக் கடுமையான பாதையாகத்தான் இருந்தது. ஒரு அரசியல் கட்சியில் பெண் தலைவராக இருந்தது சாதாரண காரியம் அல்ல. நான் தூங்காத பல இரவுகள் உண்டு. ஆனால், அந்த தூங்காத இரவுகளில் எனக்குப் பக்க பலமாக இருந்தது புத்தகங்கள். புத்தகத்தைப் படித்தவுடன் எனக்கு அசுர பலம் வரும். பெண்கள் அழுவதற்குப் பிறந்தவர்கள் அல்ல. பெண்கள் சாதிக்கத்தான் பிறந்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.