சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க முடியாமல் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வை, பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய், புதன்ஆகிய நாட்களிலும், மற்றவர்களுக்கு பிற நாட்களிலும் நடத்தவேண்டும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதை கண்டித்து, பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு உரிமம் பெற தாமதமானது.
வெகு சிலருக்கே வாய்ப்பு: இந்த நிலையில், சில ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை சேர்ந்தவர்கள், தங்கள் மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு நேற்று முன்பதிவு செய்ய முயற்சித்தனர். இதில் வெகு சிலருக்கே வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூறியதாவது: ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், மாதத்துக்கு 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கினால், எத்தனை பேருக்கு ஓட்டுநர் தேர்வு நடத்த முடியும்? தவிர, மாணவர்கள் விரும்பும் நாட்களில் தேர்வுக்கு ஏற்பாடு செய்ய முடியாது.
நேற்று மட்டும் ஒவ்வொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க முடியாமல் சராசரியாக 60 பேர் வரை திரும்பியுள்ளனர். முன்பதிவு செய்திருந்தாலும், ‘முன்பதிவு செய்யவில்லை’ என்றே கணினி தெரிவிக்கிறது. ஒருசில இடங்களில் முன்பதிவு செய்யவே முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொழில்நுட்பக் கோளாறு: இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிமத் தேர்வுக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை என்று தெரிகிறது. இது தற்போது சரிசெய்யப்பட்டு விட்டது. அதே நேரம், பயிற்சிப் பள்ளி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தால் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலுவை விண்ணப்பங்கள் அதிகரிக்கக் கூடும்’’ என்றனர்.