மதுரை வேளாண்மை கல்லூரியில் நிரந்தர முதல்வர் எப்போது நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டின் கீழ், தமிழகத்தில் 12 அரசு வேளாண்மை கல்லுாரிகள், 22 தனியார் கல்லூரிகள் உள்ளன. அரசு வேளாண்மை கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் மூலம் முதல்வர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மதுரை அரசு வேளாண்மை கல்லூரி, ஒத்தக்கடையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பிஎஸ்சி, எம்எஸ்சி வேளாண்மை படிப்புகளும், பிஎச்டி படிப்புகளும் உள்ளன. 700க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர்.
இக்கல்லூரியில் சமீபத்தில் பொறுப்பு முதல்வராக, கடந்த செப். 23-ஆம் தேதி ரகுபதி பொறுப்பேற்றார். இவருக்கு முன், சின்னசாமி, வேலாயுதம், முத்துசாமி ஆகியோர் பொறுப்பு முதல்வராக செயல்பட்டனர். ரகுபதி தற்போது 4வது பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரே ஆண்டில் கல்லூரி பொறுப்பு முதல்வராக மூன்று பேரை, இக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பார்த்துள்ளனர். கடந்த 4 ஆண்டாக நிரந்தர முதல்வர் இல்லாததால் அன்றாட கல்லூரி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படவில்லை யென்றாலும் பொறுப்பு முதல்வரால் கல்லூரி தொடர்பான தொலைநோக்கு திட்டங்களில் உடனுக்குடன் முடிவு எடுக்க முடியவில்லை. அதனால், கல்லூரியின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எப்போது நிரந்தர முதல்வர் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறுகையில்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் கல்லூரி முதல்வர், ஆராய்ச்சி இயக்குநர், விரிவாக்கத்துறை இயக்குநர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர் உள்பட 24 பதவிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. இப்பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு வைக்கப்படும். பேராசிரியராக தொடர்ந்து 6 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், இந்த பதவிகளுக்கு வரலாம். இவர்கள் இப்பதவிகளில் எவ்வித சர்ச்சைகள், சிக்கலிலும் மாட்டாமல் இருந்தால் 3 ஆண்டுகள் நீடிக்கலாம். இப்பதவிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என தாழ்த்தப்பட்ட பிரிவினர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் வேளாண்மை கல்லூரிக்கு பொறுப்பு முதல்வர் நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை உடனடியாக முடித்து, நிரந்தர முதல்வர் நியமித்தால் கல்லூரி வளர்ச்சிக்கு நலமாக இருக்கும், என்றனர்.
இதுகுறித்து கல்லூரி உயர் அதிகாரியிடம் கேட்டபோது, பொறுப்பு முதல்வர் நியமனத்தால் கல்லூரி வளர்ச்சி பாதிக்கப்படாது. வழக்கம்போல் எல்லாப்பணிகளும் நடக்கின்றன. பொறுப்பு முதல்வர் நியமிப்பதற்கான காரணம் தெரியவில்லை, என்றார்.