புதுச்சேரி அருகே மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை ஆற்றில் இறங்கி எடுத்துச் செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளன்சந்தை ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் ஒருவர் உயிரி ழந்தால் உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச் செல்ல பாதை வசதி இல்லை.
இதனால் சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் உள்ளே இறங்கித்தான் மயானத்துக்கு கொண்டு செல் கின்றனர். குறிப்பாக மழைக் காலங்களில் எவரேனும் இறந்தால் கடுமையான இன்னலுக்கு தள்ளப்படுகின்றனர்.
தற்போது சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுகிறது. இந்நிலையில் குருவி நத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டு ரங்கன் (67) என்ற முதியவர் நேற்றுஉடல்நலக் குறைவால் உயிரிழந் தார்.
மாலையில் அவரது இறுதிச் சடங்கிற்கு உடலை எடுத்துச்செல்ல வழியின்றி உறவினர்களும், கிராம மக்களும் தவித்தனர். பின்னர் ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் கடந்து சென்று உடலை அடக்கம் செய்தனர்.
மயானத்துக்கு செல்ல பாதை அமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.