விழுப்புரத்தில் உள்ள தனியார் கலை பொருட்கள் விற்பனை கூடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிவகாமி அம்மன் உலோக சிலை, ஆஞ்சநேயர், நாகதேவதை, சிவன் கற்சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று மீட்டனர். சென்னை அசோக்நகர் சிலைப் பிரிவு தலைமையகத்தில் அவற்றை பார்வையிடும் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி தினகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

ஆரோவில்லில் பழங்கால சிலைகள் மீட்பு: தனியார் கலை கூடத்தில் பதுக்கப்பட்டிருந்தன

செய்திப்பிரிவு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கலைக்கூடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உள்ள ஒரு தனியார் கலை பொருட்கள் விற்பனை கூடத்தில் பழமையான சிலைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அப் பிரிவு டிஜிபி கி.ஜெயந்த் முரளி, ஐ.ஜி ஆர்.தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

திடீர் சோதனை: இதையடுத்து அந்த தனியார் கலைப் பொருட்கள் விற்பனை கூடத்தில் சோதனை நடத்துவதற்கு, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அனுமதி பெற்றனர். இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் நேற்று திடீர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 78 சென்டி மீட்டர் உயரமுள்ள சிவகாமி அம்மன் உலோக சிலை, 45 சென்டி மீட்டர் உயரமுள்ள ஆஞ்சநேயர் கற்சிலை, 30 சென்டி மீட்டர் உயரமுள்ள நாக தேவதை கற்சிலை, 38 சென்டி மீட்டர் உயரமுள்ள இடது பக்கம் உடைந்த நிலையில் மார்பளவுக்கு மேல் உள்ள சிவன் கற்சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் ஏதேனும் கோயிலில் இருந்து திருடப்பட்டதா? வெளிநாடுகளுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT