திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில், 2-வது அணு உலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் உற்பத்தி தொடங்கியது.
இந்த உலையில் மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 750 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது.
இதற்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ள வசதியாக இந்த அணு உலையில் மின் உற்பத்தி நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டது. அணு உலையின் டர்பைன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் ஒரு வார காலம் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என, அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.