கடலூர் மாவட்டத்திலும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல், அதிகமாக பரவி வருகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. சளி, இருமலுடன் கூடிய இக்காய்ச்சல் கடுமையான சோர்வைஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் காய்ச்சல் பரவலால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்போது கூட்டம்அதிகமாக உள்ளது. குறிப்பாகஇளஞ்சிறார் மற்றும் குழந்தைகளுடன் பெற்றோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்தக் காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டடவர்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.
அனைத்து பகுதிகளிலும் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் ‘குளோரினேஷன்’ செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் காய்ச்சல், சளி இருந்தால் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும், தனியார் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது என்று சுகாதார பணிகள் துணை இயக்குநர் மீரா தெரிவித்துள்ளார்.