தமிழகம்

மரத்தடியில் பாடம், திறந்த வெளியில் சமையல்: இம்னாம்பட்டி அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுமா?

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகேயுள்ள இம்னாம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பங்குடி ஊராட்சியில் இம்னாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கடந்த 5 ஆண்டுக்கு முன், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் இம்னாம்பட்டி மற்றும் தேத்தாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 210 மாணவர்கள் பயில்கின்றனர்.

அரசுப் பள்ளியை நோக்கி ஆர்வமுடன் வரும் மாணவர்களுக்கு பள்ளியில் போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் இல்லை. அங்குள்ள மரத்தடியே மாணவர்களின் வகுப்பறையாக உள்ளது. சமையல் கூடம் இல்லாததால் திறந்த வெளியில் சமைக்க வேண்டிய அவலநிலை உள்ளது. பள்ளித் தலைமையாசிரியர் அறையும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, அரசு நடவடிக்கை எடுத்து இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் வி.ஆர்.செல்வராஜ் கூறியது:

இப்பள்ளியில் உள்ள 2 கட்டிடங்களில் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதனால் 4 வகுப்பு மாணவர்கள் வகுப்பறையிலும், மற்ற 4 வகுப்பு மாணவர்கள் மரத்தடியிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த அவலம் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்கிறது. மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்க சமையல் கூடம் இல்லாததால், அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள கருவேலங்காடு அருகே சமைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.

அதேபோல, தலைமை ஆசிரியர் அறையின் சுவர்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

குறைந்த மாணவர்களே பயிலக்கூடிய பல அரசுப் பள்ளிகளுக்கு தேவைக்கு அதிகமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், 210 மாணவர்கள் பயிலக்கூடிய இந்த பள்ளியை கல்வித் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை இல்லாவிட்டால், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டத் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT