தமிழகம்

மவுலிவாக்கம் கட்டிட இடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகையை வழங்குக: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு ஏற்று, அந்த குடும்பங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் பல வானளாவிய அடுக்குமாடி கட்டிடங்களை சர்வசாதரணமாக கட்டி சாதனை படைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் சென்னையில் வெறும் 11 மாடி கட்டவே உரிய திட்டமிடுதலோ, தரமோ இல்லாததன் விளைவு, கட்டிட இடிப்பு சம்பவம் நம் தமிழ்நாட்டின் நிலையை உலக அளவில் மிகவும் அவமானத்தை உண்டாக்கி இருக்கிறது.

ஒன்றை உருவாக்குவது தான் கடினம், அழிப்பது மிகவும் எளிது. இந்த கட்டிடம் இடிப்பதற்கு யார் காரணம்?. இந்த கட்டிடத்தை கட்ட அனுமதித்தது யார்?. பல ஆண்டுகளாக கட்டப்படும் இந்த கட்டிடத்திற்கு உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? என்ற பல கேள்விகள் மக்கள் மனதில் தோன்றுகிறது.

இந்த கட்டிடம் இடிப்பதற்கு முன்பு எத்தனை ஊழல்கள் நடந்துள்ளது என்பதை இந்த அரசும், ஊடகங்களும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆதாயம் பெற்ற ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

தங்கள் முதலீடுகளை இந்த கட்டிடத்தில் செலுத்தியுள்ள குடும்பங்கள் செய்வதறியாது விழிபிதுங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகையை இந்த அரசு ஏற்று, அந்த குடும்பங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.

மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழகத்தில் நடக்காவண்ணம் அதிகாரிகளை இந்த அரசு எச்சரித்து வழிமுறைப்படுத்த வேண்டும். இந்த 11 மாடி கட்டிடம் வெறும் செங்கல், கம்பி, சிமெண்ட் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கலவையாக மட்டும் பார்க்க இயலாது. அதன் பின் எத்தனை பேருடைய உழைப்பு, நேரம், முதலீடு, எதிர்கால கனவு, ஆகிய அனைத்தையும் அளிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு கட்டிடமாக இருந்தாலும் அனுமதி தருவதற்கு முன்பே ஒழுங்குபடுத்தி சரியாக திட்டமிட்டு யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வராமல் வழிவகை செய்யவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT