தமிழகம்

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மனுதாக்கல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் புதன்கிழமை தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன் நிறுத்தப்பட்டுள்ளார் அவர் தனது வேட்புமனுவை புதன்கிழமை மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் வீரராகவ ராவிடம் மதியம் 1 மணிக்கு தாக்கல் செய்தார். அவருடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பத்தூர் நகர பொருளாளர் மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் சம்பத், மாநிலக் குழு உறுப்பினர் ஜெகன்னாதன், ஏஐடியூசி மாநில துணை பொதுச் செயலாளர் ரவி ஆகியோர் உடன் வந்தனர்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலமுருகன், மதியம் 2 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பெ.விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் புதன்கிழமை காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள மகாத்மா காந்தி, காமராஜர், அண்ணா ஆகியோர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு பிற்பகல் 2.33 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதை மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். கட்சியின் மாற்று வேட்பாளராக, மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் ஊராட்சிமன்றத் தலைவர் ஆ.பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மறைமலைநகர் அடுத்த பெரமணூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும் கார்கில் போரில் பங்கேற்றவருமான பாரதிதாசன், புரட்சித் தமிழகம் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோர் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அரக்கோணம்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு 3 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அவர்களில், காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.உதயகுமார் (36), காட்பாடி ஏரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சாது முத்துகிருஷ்ணன் ராஜேந்திரன் (55) என்பவரும், திருத்தணி பள்ளிப்பட்டு வீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சேட்டு (41) ஆகிய 3 பேரும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கை.பலராமனிடம் மனு தாக்கல் செய்தனர்.

SCROLL FOR NEXT