ஜெயலலிதா நினைவிடம் | கோப்புப்படம் 
தமிழகம்

உயில் வெளியிடக் கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, என்னிடம் திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வில்லாக்கள் ஏற்படுத்தும்படி கூறினார். அதன் அடிப்படையில் வில்லாக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தேன். 125 வில்லாக்களுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தேன்.

இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் என்னை சந்தித்த சசிகலா, சில சொத்துக்களை எனது பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறினார். ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் சசிகலா தற்போது என்னை சந்திக்க மறுக்கிறார்.

எனவே, இந்த உயிலை வெளியிடக் கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது சமாதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறைக்கு மனு அளித்துள்ளேன்.அந்த மனுவை பரிசீலித்து உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா என்பது குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT