தமிழகம்

இன்னும் 3 நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படுகிறார் முதல்வர்

செய்திப்பிரிவு

திட்டமிட்டபடியே மருத்துவ சிகிச்சை அமைந்தால், இன்னும் 3 நாட்களில் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார் எனஅப்போலோ மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.இதற்காக அப்போலோ மருத்துவமனையில் ஓர் அறையை தயார் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்நானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரின் ஆலோச னையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த மருத்துவர் கள் குழு, முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

இவர்களுடன் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில், திட்டமிட்டபடியே மருத்துவ சிகிச்சை அமைந்தால், இன்னும் 3 நாட்களில் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார் என அப்போலோ மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

3 வாரங்களில் டிஸ்சார்ஜ்:

இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் வழங்கும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை தொடர்ந்து ஒத்துழைத்தால் கண்காணிப்புக்குப் பிறகு அவர் இன்னும் 3 வாரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுபுவார் எனக் கூறப்படுகிறது.

மேலும், "முதல்வர் சுயநினைவுடன் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு தேவையான உணவுகளை அவரே கைப்பட எழுதி பட்டியலிட்டு அவரே சாப்பிட்டார்" என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. விரைவில் அவர் பழையபடி உரையாடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்னும் 4 நாட்களில் முதல்வர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை சார்பில் மருத்துவ செய்திக் குறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT