சென்னை: கோவிலம்பாக்கம் ஏரியில் உள்ள 842 ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கத்தில் உள்ள சுண்ணாம்பு கொளத்தூர் ஏரி சுமார் 50 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இதை நீர்வள ஆதாரத்துறை பராமரித்து வருகிறது. சுமார் 20 ஏக்கர் பரப்புக்கு மேல் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஏரியில் விடுவதாகவும் குப்பை கொட்டுமிடமாக மாறியதால் ஏரி மாசுபட்டிருப்பதாகவும் நாளிதழ் ஒன்றில் கடந்த 2020-ல் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைத்து, ஏரியை ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அக்குழு அளித்த ஆய்வறிக்கையில், கோவிலம்பாக்கம் ஊராட்சி திடக்கழிவு மேலாண்மையை முறையாக கடைபிடிக்கவில்லை. கழிவுநீரை மழைநீர் வடிகால்வாய் வழியாக ஏரியில் விடப்படுகிறது. மேலும் ஏரியில் 842 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், நீர்வள ஆதாரத்துறையுடன் இணைந்து, அசல் வருவாய் ஆவணங்களின்படி ஆய்வு நடத்தி, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்வள ஆதாரத்துறை ஏரியை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, ஆக்கிரமிப்புகள் இனி ஏற்படாமல் தடுத்து, பல்லுயிர் பூங்காவாக மாற்ற வேண்டும். ஊராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.