நடுக்கடலில் மாரடைப்பால் உயிருக்குப்போராடிய மீனவருக்கு இந்தியக் கடலோரக் காவல் படை வீரர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், கரைக்கு திரும்பிய பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அந்தோணி பிச்சை(55), அவரது மகன் டேனி உட்பட 4 மீனவர்கள் விசைப் படகில் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் அன்று பிற்பகலில் மண்டபத்தில் இருந்து 35 நாட்டிக்கல் வடகிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தோணி பிச்சைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
படகில் இருந்த மீனவர்கள் வாக்கி-டாக்கி கருவி மூலம் இந்தியக் கடலோரக் காவல் படையை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி கோரினர்.
இந்தியக் கடலோரக் காவல்படை வீரர்கள் ரோந்து கப்பலில் விரைந்து சென்று அந்தோணி பிச்சைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வந்த சிறிது நேரத்தில் அந்தோணி பிச்சை உயிரிழந்தார்.
இதுகுறித்து மெரைன் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.