வாலாஜாபாத் அடுத்த நத்தா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (37). பாத்திரங்களுக்கு கலாய் பூசும் பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி சரிதா. இவர்களுக்கு, விஜய லட்சுமி (15), கார்த்திகா (9), சரஸ்வதி (8) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும், சரிதாவின் தங்கை சித்ரா (26), அவருடைய கணவர் சிவக்குமார் (38). கூலி வேலை செய்பவர். இவர்களுக்கு, லாவண்யா (7) என்ற மகள் உள்ளார்.
விஜயலட்சுமி வாலாஜாபாத் அரசு மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். மற்ற மூன்று சிறுமிகளும் நத்தா நல்லூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முறையே 4, 3, 2-ம் வகுப்புகளில் படித்து வந்தனர்.
இந்நிலையில், 7-ம் தேதி திங்கள் கிழமை காலை சிறுமிகள் நான்கு பேரும் பள்ளி செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென் றனர். ஆனால், மாலைவரை சிறுமிகள் வீடு திரும்பவில்லை.எங்கு தேடியும் சிறுமிகள் கிடைக்கவில்லை. அதனால், சிறுமிகளின் தந்தை முருகன் காணாமல் போன சிறுமிகள் குறித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 சிறுமிகளையும் தேடிவருகின்றனர்.