தமிழகம்

தஞ்சை மாநகராட்சி சார்பில் ரூ.10.75 கோடியில் கோளரங்கத்துடன் அறிவியல் மையம்: அக்டோபரில் திறக்க பணிகள் தீவிரம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரூ.10.75 கோடியில் நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் கோளரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு, தஞ்சாவூரில் கோளரங்கம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் புதிதாக நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் (செம்பார்க்) அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது அறிவியல், தொழில் நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் சார்ந்த கோட்பாடுகள், சமன்பாடுகள் போன்றவை அடங்கிய பொழுது போக்குடன் கூடிய கற்றல் மையமாக இது அமைகிறது.

அதன்படி, தஞ்சாவூர் அருளானந்தநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ள இடத்தில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.10.75 கோடி மதிப்பில் கோளரங்கம் அமைக்கப்படுகிறது.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நவீன கோளரங்கத்துடன் அமைக்கப்படும் இந்த அறிவியல் மையம் 3 பிரிவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் முதல் பகுதியில் வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறைகள், 2-வது பகுதியில் காட்சிக்கூடம், உள்அரங்க அறிவியல் சாதன மையம், கேன்டீன் ஆகியவை அமைக்கப்படுகின்றன. இந்த காட்சிக்கூடம் சிறிய தியேட்டர் போல வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக உள்ள பகுதியில் வெளி அரங்க அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது. இதில் தற்போது 30 அடி உயரம் மற்றும் 20 அடி உயரத்தில் 2 ராக்கெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் இதில் அரிய வகை விலங்குகளின் பொம்மைகள் மற்றும் தன்மைகள், அதன் உணவு வகைகள், ஆயுட்காலம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும். மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீரூற்று ஆகியவை இடம் பெறுகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் பொழுதுபோக்குடன் கூடிய ஒரு கற்றல் மையமாக திகழும்.

இந்த மையம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணிகள் அனைத்தும் தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடித்து அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT