பெரவள்ளூரில் வருவாய் ஆய் வாளரை கடத்திக் கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி சத்தியவாணி முத்து தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி அன்னசெல்வி. இவர்களுக்கு சிவசங்கர், அருண் என இரு மகன்கள் உள்ளனர். மந்தைவெளி குடிசை மாற்று வாரியத்தில் வருவாய் ஆய்வாளராக மணிமாறன் பணிபுரிந்துவந்தார். கடந்த 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மணிமாறன் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரது செல்போனுக்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து 29-ம் தேதி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அன்னசெல்வி புகார் கொடுத்தார். புகாரின்பேரில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் ஒரு புதரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தெரிய வந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அது காணாமல் போன மணிமாறன் என்பது தெரிந்தது.
போலீஸ் விளக்கம்
அதைத் தொடர்ந்து பெரவள்ளூர் போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. போலீஸார் கூறியதாவது:
மந்தைவெளி குடிசை மாற்று வாரியத்தில் வருவாய் ஆய்வாள ராக இருந்த மணிமாறன், அதே குடிசை மாற்று வாரிய சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந் தார். குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கித் தருவதாக பலரிடம் பணம் வசூல் செய்துள்ளார். ராயபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பலரிடம் பணம் வசூல் செய்து மணிமாறனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மணிமாறன் கூறியபடி பலருக்கு வீடுகள் ஒதுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் பணம் கொடுத்த வர்கள் மகேஷுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆத்திரம் அடைந்த மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து 27-ம் தேதி மாலை மணிமாறனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவரை கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு, உடலை மணிமங்கலத்தில் வீசிச் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து மகேஷ், அவரது நண்பர் எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சூர்யபிரசாஷ் ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.