சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது.
கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பிப்.12-ம் தேதியிலிருந்து 8-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் ஆன பகடை, காதில் அணியும் அணிகலன், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது தந்தத்தால் ஆன பெரிய மணி (அணிகலன்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன.
இந்த மணியின் நீளம் 5.6 செ.மீ., மொத்த விட்டம் 4 செ.மீ. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செ.மீ. மேற்பரப்பு மெருகேற் றப்பட்டு வழுவழுப்பாகக் காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக இருந்தன.