சென்னை: இந்துக்கள் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா அண்மையில் நடந்த விழா ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது காவல்நிலையங்களில் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆ.ராசா பேச்சை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, திரு.ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.