மறைமலை நகர்/காஞ்சி/ திருவள்ளூர்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதன்படி 4,453 மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டம் நேற்று (செப்.16) தொடங்கப்பட்டது. உணவு தயாரிப்புக்காக மறைமலை நகர், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் 3 சமையல் கூடம் ரூ.70 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தினமும் சமைத்து வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு உணவு அனுப்பி வைக்கப்படும்.மறைமலை நகர் நகராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மறைமலை நகரில் உள்ள 8 பள்ளிகளில் 969 மாணவர்கள், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள 2் பள்ளிகளில் 613 மாணவர்கள் என 1,582 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ். பாலாஜி, ம.வரலட்சுமி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சசிகலா, ஆணையர்கள் லட்சுமி, இளம்பரிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டாளம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி மாநகராட்சியின் கீழ் இயங்கும் 19 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,772 மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
இங்குள்ள புதுப்பாளையத் தெருவில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் உணவு தயாரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ க.சுந்தர், மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல்- சத்தியமூர்த்தி நகர் அரசு தொடக்கப்பள்ளியில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 6 பள்ளிகளில், 1,099 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், படிப்படியாக மற்ற பள்ளிகளிலும் தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரை.சந்திரசேகர், மேயர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், நரிக்குறவர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து நரிக்குறவ மக்கள் அமைச்சருக்கு பூங்கொத்து மற்றும் பாசிமணி மாலைகளை வழங்கினர். தொடர்ந்து, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 143 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களையும் அமைச்சர் வழங்கினார்.