சென்னை: தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்காக செவிலியர்கள் நேற்று காலை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்துக்கு வந்தனர்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா, பொதுச்செயலாளர் பி.நீலா, பொருளாளர் பி.பாத்திமாமேரி ஆகியோர் செவிலியர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், முன்கூட்டியே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட செவிலியர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும், செவிலியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, செவிலியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போது, சில செவிலியர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட செவிலியர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா கூறியதாவது: பதவி உயர்வு வழங்க வேண்டும். பழுதடைந்த துணை மையத்துக்கு வாடகை பிடித்தம் செய்வதை கைவிட்டு, இலவச குடியிருப்பு மற்றும் மின்சாரம் வழங்க வேண்டும். பிடித்தம் செய்த வாடகை தொகையை திரும்ப வழங்க வேண்டும்.
அரசு வழங்கிய முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகையை விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசி முகாம்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி வாங்கியிருந்தோம். போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கும்படி பொது சுகாதாரத் துறை இயக்குநர் காவல்துறைக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
ஆனால், போலீஸார் பாதுகாப்பு கொடுப்பதற்கு பதிலாக, எங்களை போராட்டத்தில் ஈடுபடவிடாமல் தடுத்து நிறுத்தினர். சுகாதாரத்துறை செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.