புதுச்சேரி: நமது ‘இந்து தமிழ் திசை’ ‘உங்கள் குரல்’ பதிவில் வாசகர் ஒருவர் ஏம்பலம் பாலாஜி, பாலமுருகன் நகர் மக்கள் 3 ஆண்டுகளாக தார் சாலை வசதியின்றி தவிப்பதாக புகார் பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு: புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பகுதியில் பாலாஜி நகர் மற்றும் பாலமுருகன் நகர் அமைந்துள்ளன.
இவ்விரு நகர்களும் அடுத் தடுத்து உள்ள நிலையில், இங்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 7-க்கும் மேற்பட்ட வீதிகள் அமைந்துள்ளன. இங்கு கடந்த 13 ஆண்டுகளாக தார் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக் காலங்களில் இப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சிய ளிக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியே சென்று வர முடி யாமல் தவிக்கும் நிலை உள்ளது.
தார் சாலை அமைத்துக் கொடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அண்மையில் இந்த நகர்களில் சாலைகள் அனைத்திலும் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு, அதன் மீது கிராவல் மண் கொட்டி பரப்பப்பட்டுள்ளன. ஆனால் தார்சாலை அமைக்கப் படாததால், அவையும் இப்போது மோசமாகியுள்ளது.
கழிவு நீர் வெளியேற வசதி இல்லை மேலும், இந்த நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீரை வெளியேற்றவும் வசதி இல்லை. இந்நகரைச் சேர்ந்தவர்களே தங்களின் சொந்த பணத்தை செலவிட்டு, தங்கள் வீட்டு கழிவுநீரை, அங்குள்ள பெரியவாய்க்காலில் பைப் மூலம் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி களைச் சேர்ந்த மக்கள் கூறும் போது, ‘‘ஏம்பலம் பாலாஜி நகர் மற்றும் பாலமுருகன் நகர் பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை அமைக்கப்படவில்லை. இந்த நகர்கள் உருவாகி, இது வரை இரண்டு எம்எல்ஏக்கள் மாறி விட்டனர். அவர்கள் வாக்கு கேட்டு வரும் போது மட்டும் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கிறோம் என்றுவாக்குறுதி அளிக்கின்றனர். அதன் பிறகு கண்டுகொள்வ தில்லை. பாலாஜி நகர், பாலமுருகன் நகரில் உள்ள அனைத்து சாலை களையும் வரும் மழைகாலத்துக்குள் தார் சாலைகளாக அமைத்து கொடுக்க வேண்டும். கழிவுநீர் வெளியே செல்ல வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.