தமிழகம்

பொழுதுபோக்காக இருந்த திரைப்படங்கள் இன்று வாழ்க்கையுடன் ஒன்றிணைந்துள்ளன: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கருத்து

செய்திப்பிரிவு

திருச்சி: பொழுதுபோக்காக இருந்த திரைப்படங்கள் இன்றைக்கு வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து உள்ளன என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பேசினார்.

திருச்சி கருமண்டபத்தில் உள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற வையத் தலைமைக் கொள் கருத்தரங்கில் ஜெய்பீம் என்ற தலைப்பில் கே.சந்துரு பேசியது: முன்பெல்லாம் பள்ளிகளில் திரைப்படம் காண்பித்தல் என்பது அரிதாக இருந்தது. அப்படியே இருந்தாலும் தலைவர்கள், துறவிகள் பற்றிய வாழ்க்கை வரலாறை பற்றி இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு பள்ளிகளில் திரைப்படம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, பல பள்ளிகளில் அரிதான திரைப்படங்களை காண்பிக்க ஆரம்பித்துவிட்டனர். பொழுதுபோக்காக இருந்த திரைப்படங்கள் இன்றைக்கு வாழ்க்கையுடன் ஒன்றிணைந்துள்ளன. திரைப்பாடல்களை சில தீர்ப்புகளில் மேற்கோள் காட்டும் போது, அந்த தீர்ப்பு சாதாரண மக்களையும் எளிதாக சென்றடையும். ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், திரைப்படங்கள், திரைப்பாடல்கள் உள்ளன.

இருளர் மக்களை பற்றி எடுக்கப்பட்ட ஜெய்பீம் படம் தமிழகத்தில் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.இப்படத்தின் முக்கிய கருப்பொருளாக ஆட்கொணர்வு மனு உள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள ராஜன் வழக்கை மேற்கோள்காட்டி வாதிடப்பட்ட பிறகு தான் இவ்வழக்கில் வெற்றி காணப்பட்டது. பல திரைப்படங்களில் உள்ள கருத்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் எழுப்பிய சட்டம், அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், மனித உரிமைகளை பாதுகாக்கும் நீதிமன்றங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். நடிகர் சூர்யா வேண்டுகோளுக்கு இணங்க ஜெய்பீம் படத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அறக்கட்டளை தொடங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சிக்கு, பள்ளி இணைச் செயலாளர் பி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கே. துளசிதாசன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் முருகதாஸன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT