பருவநிலை மாற்றம் சர்வதேச பிரச்சினையாக இருந்தாலும் உள்ளூர் தீர்வுகள் மூலம்தான் அதற்கு தீர்வு காண முடியும் என்று மொரிஷியஸ் குடியரசுத் தலைவர் பிபி அமீனா ஃபிர்டாஸ் குரிப் ஃபக்கிம் கூறினார்.
‘தி இந்து’ ஊடக ஆதார மையம் மற்றும் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி மையம் சார்பில் ‘பருவநிலை மாற்றத்துக்கு இடையே மொரிஷியஸ் நாட்டிலுள்ள வாய்ப்பு களும் சவால்களும்’ சொற்பொழிவு சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், மொரிஷியஸ் குடியரசுத் தலைவர் பிபி அமீனா ஃபிர்டாஸ் குரிப் ஃபக்கிம் கலந்துகொண்டு, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர் தாவர மரபணு தோட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பருவநிலை மாற்றம் பொருளா தார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற் றத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்த லாக உள்ளது. மொரிஷியஸ் போன்ற சிறிய வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. நாடு வளர்ச்சியடையும்போது ஏற்படும் சவால்களும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களும் ஒரே மாதிரியானவை. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அரசியல் துணிவு, அறிவாற்றல், நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் தேவை.
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பமயமாகி கடல்மட்டம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இது சில பகுதிகளில் சர்வதேச சராசரியைவிட 4 மடங்கு அதிகமாக இருக்கும். சர்வதேச சராசரி வெப்பநிலை 4 டிகிரி சென்டிகிரேடு அதிகரித்தால் 2100-ம் ஆண்டில் கடல் மட்டம் ஒரு மீட்டர் அதிகரிக்கும் என்று ஐபிசிசி அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே, தூய்மையான தொழில் நுட்பத்துக்கு மாறுவதற்கான முதல் நடவடிக்கையை மொரிஷியஸ் எடுத்துள்ளது. பருவநிலை மாற்றத் தால் மொரிஷியசில் 80 சதவீத பவளப் பாறைகள் அழிந்துவிட்ட தால், செஷல்ஸ் போன்ற தீவுகளில் பவளப் பாறைகளை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் மிகப்பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்ள புதுப்பிக்கத்தக்க எரி சக்தி தொழில்நுட்பம், பயோமாஸ் எரிசக்தி, சூரிய மின்சக்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து சர்வதேச தளத்தை உருவாக்க வேண்டும். பருவநிலை மாற்றம் சர்வதேச பிரச்சினையாக இருந் தாலும் உள்ளூர் தீர்வுகள் மூலம்தான் அதற்கு தீர்வு காண முடியும் என்றார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய நிறுவனர் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் நிறைவுரையாற்றும்போது, “உலகிலே முதன்முறையாக வேதாரண்யத்தில் உவர்நீர் தாவர மரபணு தோட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உவர்நீரில் வளரக் கூடிய புதிய தாவர வகைகளைக் கண்டறிய இந்த தோட்டம் முக்கிய ஆதாரமாகத் திகழும். மேலும், கடல் மட்டத்துக்கு கீழே விவசாயம் செய்வதற்கும், கல்வி ஆராய்ச்சிக்கும் இத்தோட்டம் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
முன்னதாக எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி மைய அறங் காவலர் வழக்கறிஞர் என்.எல்.ராஜா வரவேற்றார். நிறைவில், ‘தி இந்து’ ஊடக ஆதார மையத்தின் தலைவர் பி.ஜெய நன்றி கூறினார்.