தமிழகம்

மின் கட்டண உயர்வு | கோவை, திருப்பூர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

செய்திப்பிரிவு

மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று, கோவை, திருப்பூர் மாவட்டகூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிஉரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை அருகேகோம்பக்காடுபுதூரில் நேற்று நடைபெற்றது.

சங்கத் தலைவர் சி.பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.குமாரசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் ச.ஈ.பூபதி ஆகியோர் பங்கேற்றனர்.

சாதா விசைத்தறி 3ஏ2-வுக்கு மிக அபரிமிதமாக உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை தமிழக அரசுஉடனடியாக திரும்பப் பெறுவதுடன், முழு விலக்கு அளித்து சாதா விசைத்தறி தொழிலையும், பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும்.

கடந்த 10-ம் தேதிமுதல் சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின்கட்டணத்தை அனைவரும் முழுமையாக செலுத்தாமல் இருப்போம். தற்போது அனைத்து சிலாப்புகளுக்கும் 30 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தினால், சாதா விசைத்தறி தொழில் அழிந்துவிடும்.

ஆண்டுக்கு 6 சதவீதம்மின் கட்டண உயர்வு என்பது கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறித் தொழிலை முழுமையாக அழித்துவிடும். இந்த முடிவுகளை அரசு கைவிட வேண்டும்.

3ஏ2-வுக்கு உயர்த்திய 30 சதவீத மின் கட்டணத்தையும், ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வையும் முழுமையாக திரும்பப்பெறும் வரை, இன்று(செப்.16) காலை 6 மணி முதல் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதொடர்பாக சங்கத் தலைவர் சி.பழனிசாமி கூறும்போது, "கடந்தகால் நூற்றாண்டுகளாக, விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக தமிழகஅரசு இருந்தது. ஆனால், தற்போதுமின் கட்டண உயர்வால் விசைத்தறியாளர்களை கைவிட்டுள்ளது. இதனால் எங்களின் தொழில் நிச்சயம் பாதிக்கப்படும்.

இந்த கட்டண உயர்வால், ஒவ்வொரு விசைத்தறி கூடங்களிலும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்த நேரிடும். மின்கட்டண உயர்வை திரும்பப்பெறும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT