சென்னை: அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் கானல் நீரை போல் காணாமல் போவார்கள் என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமை தாங்கினார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டனர். அம்மாஉணவகத்தையும் மூட முயற்சித்துவருகின்றனர். அம்மா உணவகத்தை மூடினால் வரும் தேர்தலில் தோல்வி அடைய வேண்டி இருக்கும்.
கரோனாவால் 2 ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டு மெல்ல மக்கள்மீண்டு வரும் சூழலில் மின் கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர்.
எதை எதையோ பேசி விலை உயர்வை நியாயப்படுத்த பார்க்கிறார்கள். இந்த கட்டண உயர்வை விரைவில் திரும்ப பெற வேண்டும்.
அதிமுக வந்த பிறகுதான் நீட் வந்தது போல் மாயத்தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போது தான் நீட் கொண்டு வரப்பட்டது.
தடுத்து நிறுத்த போராடியது அதிமுக, நீட் இருக்கக் கூடாது என்று அதிமுக இன்றும் போராடி வருகிறது.
சுயநலவாதிகளை திமுகவில் இணைத்து கொண்டு அதிமுகவை வீழ்த்த, அழிக்க ஸ்டாலின் திட்டம் போடுகிறார். யாராலும் இந்த கட்சியை வீழ்த்த முடியாது. வீழ்த்த நினைப்பவர்கள் கானல் நீரை போல் காணாமல் போவார்கள்.
தொண்டர் பலம் எங்களுக்கு உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். அதை இங்கு வந்து பார்க்கவேண்டும். வெறும் அறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
பொய் வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது திமுக அரசு. அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து பொய் வழக்கு என்பதை நிரூபிப்போம்.
அதிமுகவுக்கு தொண்டர்கள்தான் தலைமை தாங்குவார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை, ஜனநாயகப்பூர்வமாக இயங்கும் கட்சி அதிமுகதான். எனக்கு பிறகு பலர் வருவதாக நான் கூறுகிறேன். அதேபோல், ஸ்டாலினால் சொல்ல முடியுமா?
நான் தற்காலிகமாக தலைமை பொறுப்பில் இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். நான் தற்காலிகமாக இல்லை. நிரந்தரமாகத் தான் தற்போதைய பொறுப்பில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.