தமிழகம்

அனைத்து ஏடிஎம்களும் 24 மணிநேரமும் செயல்பட வேண்டும்: வாசன்

செய்திப்பிரிவு

மத்திய அரசு உடனடியாக அனைத்து ஏடிஎம்களும் 24 மணி நேரமும் சரியாக திறக்கப்பட்டு ரூபாய் நோட்டுகளை பெற வழி வகுத்து தர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சுதந்திரத்திற்கு பிறகு ஜனநாயக இந்தியாவிலே முதல் முறையாக நகரம் முதல் கிராமம் வரை நடுத்தர மக்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

கள்ளப் பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது போன்ற மத்திய பாஜக அரசினுடைய முயற்சி மற்றும் திட்டத்தை தமாகா வரவேற்றதை நினைவு கூர விரும்புகிறேன்.

இருப்பினும் கடந்த 3 நாட்களாக அனைத்து தரப்பு மக்களும் அன்றாட உணவுக்குத் தேவையான பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வாங்குவதற்கு பல சிரமங்களை அனுபவிப்பதை பார்க்கும் போது மத்திய அரசு வகுத்த திட்டம் சரியாக இருந்தாலும் கூட, அதனை சரி செய்வதற்காக திட்டமிடுதல், செய்லபடுத்துதல் ஆகியவற்றில் சரியில்லை என்பதை மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றதே எடுத்துக்காட்டுகிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு என்றால் மருத்துவமனை, பெட்ரோல் பங்க் மட்டுமல்லாமல் சுங்கச் சாவடி உட்பட மருந்து கடைகள், தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கும் இது போன்ற விதிவிலக்கு தேவை.

மத்திய அரசு இன்று நவம்பர் 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கோட்பாடுகளை தளர்த்திருந்தாலும் கூட நவம்பர் 30 ஆம் தேதி வரை இது தளர்த்தப்பட வேண்டும். அப்போது தான் பொது மக்களுக்கு ஓரளவிற்கு பணத் தட்டுப்பாடு மட்டுமல்லாமல் மிக முக்கியமாக தற்போது ஏற்பட்டுள்ள அவசிய, அன்றாட பிரச்சனையை குறைக்க முடியும்.

எனவே மத்திய அரசு உடனடியாக அனைத்து ஏடிஎம்களும் 24 மணி நேரமும் சரியாக திறக்கப்பட்டு 50, 100, 500, 2000 போன்ற ரூபாய் நோட்டுகளை பெற வழி வகுத்து தர வேண்டும். இதன் மூலம் பொது மக்கள் குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் சிரமமின்றி அன்றாட வாழ்க்கையை வாழ அனைத்து நல்ல முயற்சிகளையும் உடனடியாக எடுத்து மக்கள் நலன் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT