சென்னை: காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆரம்பித்த முதல்வர் ஸ்டாலினே அதனை அவமானப்படுத்திவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கிவைத்தார். திட்டத்தை தொடங்கிவைத்து பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தியதுடன், அம்மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டார்.
இந்நிலையில், முதல்வருக்கு பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட முதல்வர், அந்த தட்டில் எஞ்சியிருந்த உணவிலேயே கைகளை கழுவினார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்துவந்தனர்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "அந்தத் திட்டத்தை முதல்வரே தொடங்கி வைத்துவிட்டு, அவருக்கு புது எவர்சில்வர் தட்டு, புது ஸ்பூன் எல்லாமே கொடுத்தனர். அதில் அவருக்கு உணவு பரிமாறினார்கள். அதை அவர் என்ன செய்ய வேண்டும். அந்த குழந்தைகளுடன் உட்கார்ந்து முழுமையாக சாப்பிட வேண்டும் இல்லையா. ஆனால், இரண்டு வாய்தான் எடுத்து வைத்திருப்பார். அதற்குள் அந்த தட்டிலேயே கையை கழுவிவிட்டார்.
முதல்வர் ஆரம்பித்த திட்டத்தை முதல்வரே அவமானப்படுத்துகிறார். விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கின்றனர் அந்தப் பொருட்களை. அந்தப் பொருட்களை வீணடிக்கும் வகையில் முதல்வர் அந்த தட்டிலேயே கை கழுவியிருக்கிறார். இந்தக் காட்சிகள் ஊடகங்களில் பரவியிருக்கிறது" என்று அவர் கூறினார்.