தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி, “வாக்களிக்கும் வைபோகம்” என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் விநியோகிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் ஷேக் அகமது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்தது: தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.எனவே, வாக்காளர்கள் தவறாமல் 100 சதவீதம் நேர்மையாகவும், நியாயமாகவும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஆட்சியர் தலைமையில், கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, அவர்களின் குடும்பத்தினரை தவறாமல் வாக்களிக்கச் செய்யும் விதமாக, “வாக்களிக்கும் வைபோகம்” என்ற தலைப்பில் அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டது. அதன் முதல் பக்கத்தில், திருமண அழைப்பிதழில் உள்ளது போல நாள்- நட்சத்திரம், வாக்களிப்பதன் நோக்கம் மற்றும் நெறிமுறைகளும், அடுத்த பக்கத்தில் வாக்குச்சாவடியில் உள்ள வசதிகள், வாக்களிக்கும் முறை குறித்த படங்களும் இடம் பெற்றுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீடுவீடாகச் சென்று இந்த அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சேவியர் தொழில்நுட்ப பயிற்சி நிலையம், ஜெயம் நர்சிங் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.