தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

தென்கிழக்கு வங்கக்கடலிலும், லட்சத்தீவு அதையொட்டிய மாலத்தீவு பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதுபோல லட்சத்தீவு அதையொட்டிய மாலத்தீவு பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 13, 14 தேதிகளில் பரவலாக சுமாரான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர், தூத்துக்குடி, கோவில்பட்டி, நாங்குனேரி, பாளையங்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT