சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுக்கைகள் நிரம்பியுள்ளதால், கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவகால நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆண்டுதோறும் பருவகால நோய்கள் வருவது இயல்பானது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். காய்ச்சல் மட்டுமின்றி இருமல், சளி, டெங்கு போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர். நவம்பர், டிசம்பரில் நோய்களின் பாதிப்பு குறைந்துவிடும். இதனால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து எடுத்து கொள்ளக் கூடாது. காய்ச்சல் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளிப்பார்கள்” என்றனர்.