தமிழகம்

பாலமுரளி கிருஷ்ணா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

மறைந்த இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் பெசன்ட்நகர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கர்னாடக இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா (86) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் உள்ள பாலமுரளி கிருஷ்ணாவின் வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் இளையராஜா, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூ. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், நடிகர் சிவக்குமார், கர்னாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பாடகிகள் சுதா ரகுநாதன், நித்ய  மகாதேவன், ரஞ்சனி, காயத்ரி, வாணி ஜெயராம், பாடகர் மனோ, இயக்குநர் வசந்த் உட்பட ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்

கே.ஜே. ஜேசுதாஸ், அருணா சாய்ராம், கர்நாடக இசைக் கலைஞர் பி.எஸ்.நாராயணசாமி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர்கள் தினா, எஸ்.ஏ.ராஜ்குமார், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் நடராஜ், நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

பாலமுரளி கிருஷ்ணாவின் உடலுக்கு நேற்று காலை அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறும்போது, “பாலமுரளி கிருஷ்ணா மிகப்பெரிய சாதனையாளர். அவருடைய மறைவு பெரிய இழப்பு. அவரை சந்திக்க, பாடல்களை வாங்கிச் செல்ல பலமுறை இங்கு வந்திருக்கிறேன். அவரது இசை என்றும் வாழும்’’ என்றார்.

நேற்று மாலை 2.45 மணியளவில் தொடங்கிய அவரது இறுதி ஊர்வலம், கதீட்ரல் சாலை வழியாக பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்தது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

          
SCROLL FOR NEXT