சென்னை: சிறு, குறு வணிகர்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அதன்மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் சில்லரை சிறு, குறு வணிகர்களை கூட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) இனத்தின் கீழ் சான்றிதழ் பெற அனுமதி வழங்கியுள்ளது. இது சிறு, குறு வணிகர்களையும், வணிகத்தையும் ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கவும், பணப் புழக்கத்தை பெருக்கவும் எடுக்கப்பட்ட சிறந்த முடிவாகும்.
பெரும் தொழிற்சாலைகளுக்கும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பயன்பாட்டுக்கான மின்கட்டணம், வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை விட குறைவாக இருப்பதோடு, சிறு,குறு வணிகர்கள் என்கிற இயற்கை நீதியைக் கூட கவனத்தில் கொள்ளாமல் மின்கட்டணத்தைக் கூடுதலாக உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்துக்கு உரியது.
ஏற்கெனவே, உயரழுத்த கட்டணப் பட்டியலில் உச்சகட்ட பயன்பாட்டு நேரக் கட்டணம் காலை மற்றும் மாலையில் 6 மணி முதல் 9 வணி வரையிலும் கூடுதலாக 25 சதவீதமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதை தற்போது தாழ்வழுத்த 3-பி பட்டியல் இனத்துக்கான கட்டணமாக நிர்ணயிக்க முடிவெடுத்திருப்பது தொழில்முனைவோர், வணிகர்கள் அனைவரையும் பாதிக்கும். எனவே, இந்தக் கட்டண உயர்வை மின் வாரியம் ரத்து செய்து தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும்.